இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த தருஷ்மன் குழுவின் அறிக்கை உள்ளிட்ட
யுத்தம் தொடர்பான அனைத்து பொது ஆவணங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவி
னால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரண்பாடுகள் நிலவுகின்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் விளக்கங்களை கோருவோம் எனவும் சர்வதேச நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட தருஷ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேச நிபுணர் குழு விரிவாக ஆராயவுள்ளதாக நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சேர் ஜெப்ரி நைஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்கு உள்ளக ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குமாறு நாங்கள் கேட்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். ''யுத்தம் தொடர்பான அனைத்து பொது ஆவணங்களையும் நாங்கள் ஆராயவுள் ளோம். முரண்பாடுகள் நிலவுகின்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் விளக்கங்களை கோருவோம் என்றும் சேர் ஜெப்ரி நைஸ் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையின் சிவில் யுத்தம் குறித்தும் அதன் சவால்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் தான் நன்கு அறிந்துள்ளதாக சர்வதேச நிபுணர் குழுவின் மற்றுமொரு உறுப்பினரான பேராசிரியர் டேவிட் கிரேன் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் குற்றச்சாட்டுக்கள் குறித்து தற்போது பொதுவான முறையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தான் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
''திறந்த மனதுடன் இந்த நடவடிக்கைகையை முன்னெடுக்க நான் வந்துள்ளேன். அந்தவகையில் உள்ளக ஆலோசனைக் குழுவுக்கு எனது சட்ட ஆலோசனைகளை வழங்கவுள்ளேன்'' என்று பேராசிரியர் டேவிட் கிரேன் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் அனுபவம் மிக்க மூன்று அதிகாரிகள் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்தவாரம் அறிவித்தார். இந்தக் குழுவுக்கு சேர் டெஸ்மன் டி சில்வா தலைமை தாங்குகின்றார். இவருடன் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணை பரப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரிவுபடுத்தியுள்ளார்.
அதாவது யுத்த காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டதிட்டங்களை ஆராய்ந்து அறி க்கை சமர்ப்பிப்பதற்குரிய பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையிலேயே இதன் ஆணை விரிவாக் கம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தேவைப்படும் போது மேலும் ஆணைக்குழுவுக்கு நிபுணர்கள் நியமிக்கப்படலாம் என்றும் ஜனாதிபதி பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவுக்கு ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த நிபுணரான சேர் டெஸ்மன்ட் டி. சில்வா தலைமை தாங்குகின்றார். அத்துடன் நிபுணர் குழுவில் இடம்பெறுகின்ற மற்றுமொரு உறுப்பினரான சேர் ஜெப்றி நைஸ் லண்டனில் சர்வதேச சட்டதிட்டங்கள் குறித்த பேராசிரியராக உள்ளார். மேலும் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் டேவிட் கிரேன் சிரா லியோன் தொடர்பான விசேட நீதிமன்றத்தில் பிரதான பதவி ஒன்றில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகத்தினால் தனிப்பட்ட ரீதியில் நியமிக்கப்பட்டிருந்தார்.